மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி

அன்பர் திருச்சித்ரகூடம் ரங்கநாதன் ஸ்வாமி வெகு நாள்களாக மிகவும் பிரயாசைப்பட்டுத் தேடி அலைந்து பெற்ற நூல் “மகரநெடுங்குழைக்காதர் பாமாலை அந்தாதி”. அவரிடம் எப்போது பேசினாலும் கடைசியில் அவர் வந்து நிற்பது இந்த நூல் பற்றித்தான் இருக்கும். ஒவ்வொரு முறை அவர் இதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடியேனுக்குள்ளும் ஒரு ஆவல் எழும். கடைசியில் நூலின் ப்ரதி ஒன்று அவருக்கு இரவலாகக் கிடைத்ததும் அதன் நகல் ஒன்றினை அடியேனுக்கு அன்புடன் அளித்தார். பிரித்துப் படிக்க ஆரம்பித்தவுடனேயே பலரும் இதை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையினால்   பகிர வேண்டும் என்ற ஆவலும் வந்தது . ஒரு தயக்கமும் வந்தது. பதிப்பித்தவர் வைணவர்கள் போற்றும் திருச்சி புத்தூர் ஸுதர்சனர் ஸ்வாமி. அவரது வாரிசுகள் ஆக்ஷேபிப்பார்களோ என்ற எண்ணத்தினால் ஏற்பட்ட தயக்கம் அது.  ஆனாலும் அதையும் மீறி இங்கே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தட்டச்சிட ஆரம்பித்தால் எப்போது முடிப்பேனோ தெரியவில்லை. அதனால் நூலை வருடி, படங்களாகவே இங்கு பகிரப் போகிறேன். வாரம் குறைந்த பக்ஷம் பத்துப் பக்கங்களாவது பதிவிட முயற்சிக்கிறேன். இனி நூலின் முதல் சில பக்கங்கள்

makara nedunguzhai kaathar pamalai_1makara nedunguzhai kaathar pamalai_2makara nedunguzhai kaathar pamalai_3makara nedunguzhai kaathar pamalai_4makara nedunguzhai kaathar pamalai_5makara nedunguzhai kaathar pamalai_6makara nedunguzhai kaathar pamalai_7makara nedunguzhai kaathar pamalai_8makara nedunguzhai kaathar pamalai_9makara nedunguzhai kaathar pamalai_10makara nedunguzhai kaathar pamalai_11makara nedunguzhai kaathar pamalai_12makara nedunguzhai kaathar pamalai_13makara nedunguzhai kaathar pamalai_14makara nedunguzhai kaathar pamalai_15makara nedunguzhai kaathar pamalai_16

Posted in மகரநெடுங்குழைக்காதர் பாமாலை அந்தாதி | 1 பின்னூட்டம்

அத்தியாளநல்லூர் ஸ்தல மான்மியம் 5

நூல்

நாட்டுச் சிறப்பு

மாம ணித்திர ளருவிசால் பொதியமால் வரையிற்
றேம லர்த்திரள் செந்திரு முகமெனச் செழிப்பப்
பூம ணிக்குளம் பொலிதர வருபெரும் பொருனைக்
காமர் பெற்றது பாண்டிய நாடெனக் கரைவார்.    .10.

.மாமணித் திரள் – பேரழகு திரண்ட; அருவிசால் – நீர்வீழ்ச்சிகளமைந்த; பொதியமால் வரையில் – பொதிகை மாமலையில்; தேமலர்த் திரள் – மிகுதியான மணம்நிறை புஷ்பங்கள்; செந்திரு முகமென – செய்ய இலக்குமி முகம்போல்; செழிப்ப – வளமுடன் விளங்க; பூமணிக்குளம் பொலிதர – பொலிவுள்ள அழகிய நெற்றிபோல் விளங்க; வருபெரும் பொருனை – வரும் பெரிய பொருனை நதியின்; காமர் –எழில்; பெற்றது – கொண்டது; பாண்டிய நாடென; கரைவார் – கூறுவார்கள்

வேறு

காவெலாம் மயிலின் ஈட்டம் கரைஎலாம் பணிலம் வாசப்
பூவெலாம் வண்டு செந்தேன் பொழிமதுத் தடத்துப் பொய்கைத்
தாவெலாம் அன்னம் பண்ணைத் தலனெலாம் தரளம் சார்ந்த
மாவெலாம் குயில்கள் அந்த வனமெலாம் மணியின் சும்மை            .11.

காஎலாம் – சோலை எங்கும்; மயிலின் ஈட்டம் – மயிலின் கூட்டம்; கரை எலாம் – வரப்புகளில் எங்கும்; பணிலம் – சங்குகள்; செந்தேன் பொழி – செவ்விய தேன் சொரியும்; வாசப் பூ எலாம் – மணமுள்ள மலர்கள் எல்லாம்; வண்டு – தும்பிகள்; மதுத்தடத்து – இனிய தடாகத்தும்; பொய்கை – குளங்களின்; தா எலாம் – பள்ளங்கள் யாவிலும்; அன்னம் – அன்னப் பட்சிகள்; பண்ணைத் தலனெல்லாம் – வயல்களெல்லாம்; தரளம் – முத்துக்கள்; சார்ந்த – அருகுள்ள; மாஎலாம் – மாமரங்களிலெல்லாம்; குயில்கள் – கோகிலங்கள்; அந்த வனமெலாம் – அந்தக் காடுகள் முற்றும்; மணியின் – நவமணிகளின்; சும்மை – தொகுதி.

கரும்பொடு தென்னை பூகம் கதலிபால் வருக்கை காமர்
அரும்புதண் ஆதம் வானம் அளாவுகுங் குமங்கள் எல்லாம்
விரும்பிவந் தேற்போர்க்(கு) ஈயும் வித்தக ரென்னத் தோன்றச்
சுரும்பின மவர்பா லேற்கும் தீனரிற் பரந்து சூழும்.                       .12.

கரும்பொடு – கன்னலுடன்; தென்னை –தென்னை மரம்; பூகம் –பாக்கு மரம்; கதலி – வாழை; பால் வருக்கை – பால்மர வர்க்கங்களான பலா போன்றவை; காமர் – அழகு; அரும்பு – விரியும்; தண் ஆதம் – குளிர்ந்த மாமரம்; வானம் அளாவு – வானம் முட்ட ஓங்கிய; குங்குமங்கள் – குங்கும மரங்கள்; எல்லாம் –யாவும்; விரும்பி வந்து – ஆசையுடன் உற்று; ஏற்போர்க்கு – இரப்பவர்களுக்கு; ஈயும் – அளிக்கும்; வித்தகர் என்னத் தோன்ற – அறிஞர் எனக் காட்சி தர; சுரும்பினம் – வண்டுகள்; அவர்பால் – அவ்வித்தகரிடம்; ஏற்கும் –இரக்கும்; தீனரில் – வறிஞர்போல்; பரந்து சூழும் – பரவலாகச் சுற்றி இருக்கும்.

திருவொடு செருக்கும் வல்ல செய்கையும் மறமும் கோளும்
பொருளும்புன் மதியும் பெற்ற பூரியர் தலைபோல் நின்று
மருளறு ஞானத் தோர்தம் முடிஎன வளைந்து பாரில்
இருளுற வானுற் றோங்கும் இரும்பணை யாவும் செந்நெல்.       .13.

திருவொடு – செல்வமுடன்; செருக்கும் – அகந்தையும்; வல்ல செய்கையும் – வலிய செயலும்; மறமும் – பாவமும்; கோளும் – புறங்கூற்றும்; பொருளும் – மக்களும்; புன்மதியும் – இழிந்த புத்தியும்; பெற்ற – கொண்ட; பூரியர் – கீழ்மக்கள்; தலைபோல் – சிரம்போல்; நின்றும் – நிமிர்ந்தும்; மருளறு – மயக்கமற்ற; ஞானத்தோர் – அறிஞர்; தம்முடி என – தங்கள் தலைபோல; வளைந்து – குனிந்து; பாரில் – பூமியில்; இருளுற – இருட்டுச் சார; வானுற்று – விண்ணையடைந்து; ஓங்கும் – உயரும்; இரும்பணை யாவும் – பெரும் பண்ணைகள் எல்லாம்; செந்நெல் – செம்மையான நெற்கள் நிலவும். 

Posted in அத்தியாளநல்லூர் | பின்னூட்டமொன்றை இடுக

அத்தியாளநல்லூர் ஸ்தல மான்மியம் 4

அவையடக்கம்

சித்தி யாடரு தேவர்மா தவர்தினம் வழுத்தும்
அத்தி யாளநல் லூரருள் மான்மிய மதனை
பத்தி யாற்றமிழ்ப் பாவினாற் பாடினன் சிறந்த
புத்தி யாளரென் புலமையை நகுவரோ புலவீர்.     .7.

சித்தி ஆள் தரு – மோட்சம் கைவந்த; தேவர் – வானவர்; மாதவர்—மகரிஷிகள்; தினம் வழுத்தும் – நாளும் துதிக்கும்; அத்தியாளநல்லூர் அருள் மான்மியமதனை – அத்தியாள நல்லூர்ப் புராணத்தை; பத்தியால் – அன்பால்; தமிழ்ப்பாவினால் – தமிழ்ப் பாடல்களால்; பாடினன் – இசைத்தனன்; சிறந்த புத்தியாளர் – பேரறிஞர்கள்; என் புலமையை – என் கல்வியறிவை; நகுவரோ—பழிப்பரோ; புலவீர் – அறிஞர்களே!

எண்ணும் எண்ணெயும் ஆமென எவற்றினும் உறையும்
கண்ணன் மாதவன் கரியவன் கசேந்திர வரதன்
அண்ண னாயிரம் பெயரவ னருளினால் இந்தப்
புண்ணியக் கதை சொற்றிடத் துணிந்தது போலாம்.       .8.

எண்ணும் எண்ணெயும் ஆம் என – எள்ளும் எண்ணெயும் போல; எவற்றினும் – அனைத்தினுள்ளும்; உறையும் – விளங்கும்; கண்ணன் மாதவன் கரியன் – மாதவப் பேருடைய கார்வண்ணக் கண்ணன்; கசேந்திர வரதன் – ஆனையரசுக்கு அருளியவன்; அண்ணன் – பெரியவன்; ஆயிரம் பெயரவன் – சகசிரநாமன்; அருளினால் –கிருபையால்; இந்தப் புண்ணியக் கதை – இந்தத்தரும காதை; சொற்றிடத் துணிந்தது – கூறத்துணிந்தது; போல் ஆம் – அசை.

எழுத்து சொற்பொருள் யாப்பலங் காரமென் றிசைக்கும்
வழுத்(து) இலக்கண வகைசிறி(து) அறிந்திலன் மாட்சி
பழுத்த நுண்ணறி வாளர்முன் பாடிடத் துணிதல்
சுழுத்தி யிற்பரம் புருடனைத் தெரிந்துசொல் லுதலே.      .9.

எழுத்து சொற்பொருள் யாப்பு அலங்காரம் என்று – ஐந்திலக்கணம் என; இசைக்கும் – கூறும்; வழுத்திலக்கண வகை – சிறந்த இலக்கண வகை ; சிறிது அறிந்திலன்—கொஞ்சமும் தெரியாதவன்; மாட்சி – சிறப்பு; பழுத்த – கனிந்த; நுண்ணறிவாளர் முன் – கூர்மையான அறிஞர்முன்; பாடிட – இசைக்க; துணிதல் – தொடங்குவது; சுழுத்தியில் – புலன்கள் உறங்குகையில்; பரம் புருடனை – பரமாத்மாவை; தெரிந்து – அறிந்து ; சொல்லுதல் – கூறுதலாம்.

  

Posted in அத்தியாளநல்லூர் | பின்னூட்டமொன்றை இடுக

அத்தியாளநல்லூர் ஸ்தல மான்மியம் 3

பொய்கையொடு பூதம்பேய் மழிசை வேந்தன்
          பொற்குருகை வருமாறன் திருக்கோ ளூர்வாழ்
அய்யனருட் சேரலர்கோன் விண்டு சித்தன்
          ஆண்டாள்மெய்த் தொண்டரடிப் பொடியார் பாணன்
மெய்யுறுசீர் வாட்கலியன் புரையில் கேள்வி
           வேதாந்த தேசிகன்விண் மண்ணோர் போற்று
மையறுமா மணவாள முனிவன் பாத
          மரைப்போதெப் போதுமுளம் வைத்து வாழ்வாம்.           .5.

திருக்கோளூர் வாழ் அய்யன் – மதுரகவி; பொய்கை, பூதம், பேய் எனும் முதலாழ்வார்கள், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி, குலசேகர ஆழ்வார், பெரியா.ழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி, திருப்பாணன், திருமங்கைமன்னன் ஆகிய பன்னிரு ஆழ்வார்களுடன், புரையில் கேள்வி – குற்றமற்ற ஞானம் உடைய வேதாந்த தேசிகன், விண்ணும் மண்ணும் போற்றுகின்ற மணவாள மாமுனிகள், இவர்களது பாதமரைப்போது – திருவடி மலர்கள், எப்போதும் உளம் வைத்து, வாழ்வோம்.

வேரி யம்பொழில் வில்லிபுத் தூர்நலம் மேவ
சீரி யன்றமா மறையவர் தமக்கொரு திலகன்
பேரி யன்றமெய் வீரரா கவனெனப் பேசும்
ஆரி யன்கழல் அனுதினம் முடிமிசை அணிவாம்.                     .6.

வேரி அம்பொழில் – எழிலும் மணமுமுள்ள சோலைசேர், வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர், நலம் மேவ – நன்மை அடைய, சீரியன்ற – சிறப்புப் பெற்ற, மா மறையவர் தமக்கு — வேதியர்களுக்கு, ஒரு திலகன் –ஒப்பற்ற திலகம் போன்றவன், பேர் இயன்ற – பெருமை சார்ந்த, மெய் – உண்மையுள்ள, வீரராகவனென – வீரராகவன் என்று, பேசும் –கூறும், ஆரியன் கழல் – குரவன் (ஆசார்யன்) பாதம், அனுதினம் – தினந்தோறும், முடிமிசை அணிவாம் – தலைமேல் சூடுவோம். 

Posted in அத்தியாளநல்லூர் | பின்னூட்டமொன்றை இடுக

அத்தியாளநல்லூர் ஸ்தல மான்மியம் 2

முத்திதரு மாநெறியை முன்னி அயல்நின்ற
அத்துவித பாசமற ஆங்குயிர்கள் எல்லாம்
சொத்தமல னுக்கெனல்வி ளக்குசுகு ணப்பேர்
வத்துமுனி யுத்தமனை மன்னும் உளம் வைப்பாம்.     .3.

முத்திதரும் – வீடு பேற்றுக்கு; மாநெறியை முன்னி – சிறந்த மார்க்கம் நினைந்து; அயல்நின்ற – அண்மையில் இருந்த; அத்துவித – அந்தத்துவைதம் (இருவகை) என்ற; பாசம் அற – பற்று ஒழிய; ஆங்குயிர்கள் எல்லாம் – ஜீவராசிகள் அனைத்தும்; சொத்தமலனுக்கு எனல் — இறைவனின் சொத்து என்பதை; விளக்கு – பொலியச்செய்; சுகுணப்பேர் – நற்குணமென்ற பெயருடைய; வத்து முனி – பொருளாம் முனிவன் (இராமாநுஜன்); உத்தமனை – சிரேஷ்டனை; மன்னும் உளம் வைப்பாம் – விளங்கும் மனத்தில் (வைப்போம்) துதிப்போம்.

ஆழி சூழ்தரும் அவனிஓர் குடைநிழ லளிக்கும்
ஆழி நாயகற்(கு) அன்புறு தூதனாய் அடல்கொண்(டு)
ஆழி தாயணி வீழிவாய் அழகுறும் சீதைக்(கு)
ஆழி நல்கும்எம் அனுமனைப் பரவியன் புறுவாம்.     .4.

ஆழிசூழ் தரும் அவனி — கடல்சூழ் புவியை; ஓர் குடை நிழல் – ஒரே ஒரு வெண்கொற்றக் குடையின் கீழ்; அளிக்கும் – ஆளும்; ஆழி நாயகற்கு – சக்கரம் தரித்த திருமால் ராமனுக்கு; அன்புறு தூதனாய் – பக்திசார் தூதனாக; அடல் கொண்டு – வலிமையுடன்; ஆழிதாய் – கடல் தாவி; அணிவீழிவாய் அழகுறும் – அழகிய கொவ்வைச் செவ்வாய் எழில்சேர்; சீதைக்கு – ஜானகிக்கு; ஆழி நல்கும் – கணையாழி தரும்; எம் அனுமனை – எங்களாஞ்சநேயனை; பரவி – துதித்து; அன்புறுவாம் – அவனன்பைப் பெறுவோம்.

Posted in அத்தியாளநல்லூர் | பின்னூட்டமொன்றை இடுக

அத்தியாளநல்லூர் ஸ்தல புராணம்

நல்ல தமிழ் அறிந்தோருக்கு மிகவும் பரிச்சயமான மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்கார் இயற்றி அருளிய லக்ஷக்கணக்கான தமிழ்ப்பாடல்களில் ஒன்று மதுரகவி திருவத்தியாள நல்லூர் ஸ்தல மான்மியம் என்பது. திருவத்தியாள நல்லூர் எது? தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமான இன்னொருவர் திரு மணவை முஸ்தபா. இந்த மணவைதான் திருவத்தியாளநல்லூர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீரவநல்லூரை அடுத்துள்ள ஒரு அழகான சிற்றூர். பொதியமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. என்ன சிறப்பு? ஊரின் மற்றொரு பெயரையும் சொல்லிவிட்டால் படிப்பவர்களில் அநேகமாக அனைவருக்குமே தெரிந்துவிடும். ஆனைஅழுங்குங்குளம் என்ற அழகான பெயர். அழுங்கும் என்றால் வருந்துதல், ஆனை வருந்திய குளம் அதாவது மடு. புரிந்திருக்குமே இதுதான் அன்று ஆதிமூலமே என்று அழைத்த ஆனையின் குரலுக்கு அரக்கப் பரக்க நாராயணன் ஓடி வந்து அபயம் அளித்த ஊர் என்று. கஜேந்திர மோக்ஷம் நிகழ்ந்த அந்த ஊரின் ஸ்தல மான்மியத்தை தன் மதுர கவிகளால்  சுவை சொட்டச் சொட்ட அருளியிருக்கிறார் நம் மதுர கவி. தினமும் கொஞ்சமாக அப்பாடல்களையும், அவற்றுக்கு கம்பன் திரு இராமன் அளித்துள்ள எளிமையான சிறு குறிப்புகளையும் தொடர்ந்து படிக்கலாம்.

இனி மதுரகவியின் வாக்கில் “அத்தியாளநல்லூர் ஸ்தல மான்மியம்”

காப்புகள்

சித்தி யாளத் தினம்முனி வோர்புகழ்
அத்தி யாளநல் லூரருண் மான்மியம்
பத்தி யாளர் பரவும் படிசொல
முத்தி யான முதலடி போற்றுவாம்.
    
                            .1.

சித்தி ஆள – மோட்சநிலை அடைய; தினம் – நாள்தோறும்; முனிவோர் – ரிஷிகள்;புகழ் – போற்றும்; அத்தியாளநல்லூர் – அத்தியாள நல்லூர் என்ற தலத்தின்; அருள் மான்மியம் – அருள்சேர் புராணம்; பத்தியாளர் – பக்தர்கள்; பரவும்படி சொல – படித்து வணங்கும்படி கூற; முத்தியான – பரமபதநாதனான;முதல் அடி – மூலப்பொருளின் திருவடி; போற்றுவாம் – துதிப்போம்

நம்மாழ்வார் துதி

ஆறன் பாயணி வோன்அரன் ஆதியோர்
தேறன் பார்திரு வாய்மொழி செப்புநா
வீறன் பார்புகழ் மேன்மைக் குருகைவாழ்
மாறன் பாத மலர்தினம் வாழ்த்துவாம்.
                                                                                 .2.

ஆறு அன்பாய் அணிவோன் அரன் — கங்கையை அன்பாகச் சூடிய சிவன்; ஆதியோர் – முதலாம் இறைவர்கள்; தேறு அன்பார் — தெளிகின்ற அன்புசால்; திருவாய்மொழி – திருவாய்மொழிப் பிரபந்தம்; செப்பும் – கூறும்; நாவீறன் – நாவண்மையன்; பார்புகழ் – உலகு புகழும்; மேன்மை – மேலான; குருகை வாழ் மாறன் — குருகை நகர் வாழ் நம்மாழ்வார்; பாதமலர் – திருவடித்தாமரை; தினம் – நாள்தோறும்; வாழ்த்துவாம் – போற்றுவோம். 

Posted in அத்தியாளநல்லூர் | பின்னூட்டமொன்றை இடுக

நித்யம்–சேட்லூர் ஸ்வாமி வ்யாக்யானம் 6

தேவர்ஷி பித்ரு தர்ப்பணம்

     கால்கைகளையலம்பி, ஆசமனம் செய்து ஸ்ரீபகவதாஜ்ஞ்யா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் ஸ்நாநாங்கம் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்துக் கொண்டு தேவதைகள், ருஷிகள், பித்ருக்கள், எல்லோரும் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்யவேண்டும். ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்தான் தர்ப்பயாமி! ஸர்வாம் தேவாம்ஸ் தர்ப்பயாமி! ஸர்வ தேவகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வதேவ பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ தேவகண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று நுனி விரல்களால் தர்ப்பணம் செய்யவேண்டும். யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக்கொண்டு இரண்டு கட்டைவிரல்களிலும் மாட்டிக்கொண்டு ஒம் க்ருஷ்ணத்வைபாய நாதயோயே ருஷ்ய: தாந் ருஷிம்ஸ்தர்ப்யாமி ! ஸர்வாந் ருஷீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிகணபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று இரண்டு கைகளின் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும். யஜ்ஞோபவீதத்தை ப்ராசீனாவீதமாகத் தரித்துக்கொண்டு ஸோம: பித்ருமான் யமோங்கிரஸ்வாந் அக்னிகவ்யவாஹ நாதயோ யே பிதர: தாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ பித்ருகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வபித்ருபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ பித்ருகணபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று வலது கைக்கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும். பிறகு ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பய தமேபித்ரூந் என்று இரண்டு கைகளிலும் ஜலமெடுத்து ப்ரதக்ஷிணமாகச் சுற்றி இடது பக்கம் கரையில் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லி மூன்று தடவை ஜலத்தை இறைக்க வேண்டும். யஜ்ஞோபவீதத்தை க்ரமமாகத் தரித்துக் கொண்டு ஆசமனம் செய்யவேண்டும். ஶிரஸ்நானம் செய்யாத பக்ஷத்திலும் தீட்டு முதலியவைகளுக்காக ஸ்நானம் செய்யும்போதும், தேவருஷி பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது. பகவாநேவ என்றாரம்பித்து, ப்ராத ஸ்நாநாக்யம் கர்மஸ்வஸ்மைவ ப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று ஸாத்விக த்யாகம் செய்து அநேந ப்ராதஸ்நாநாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீத்யதாம் வாஸுதேவ: என்று ப்ராத ஸ்நானத்தை முடிக்க வேண்டும்.     

Posted in நித்யம் | பின்னூட்டமொன்றை இடுக